தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டார் நடிகர் விஜய்.
தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் மாலை 4.45 மணிக்கு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் தேமுதிக அலுவலகம் வந்தார். விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கியபடி நின்று சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் அவரால் தன்னுடைய காருக்கு செல்ல முடியவில்லை. போலீஸார், பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது சிலர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர்.
அவர் காரில் ஏறச் சென்றபோது எங்கிருந்தோ இரண்டு செருப்புகள் அடுத்தடுத்து விஜய்யை நோக்கி பறந்து வந்தன. ஆனால் அவை விஜய்யின் மீது படவில்லை. ஒரு செருப்பை விஜய்யின் அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கைகளால் பிடித்து வந்த திசையில் தூக்கி வீசினார். இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. செருப்பை வீசியது யார் என்பது குறித்து வீடியோவில் பதிவாகவில்லை. செருப்புகள் வேண்டுமென்றே வீசப்பட்டனவா? அல்லது தவறுதலாக வந்துவிழுந்ததா என்று தெரியவில்லை. எனினும் பலரும் இந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.