தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்: ராதிகா

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த் என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர். விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன். தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர். சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர். அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது. அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்.

விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது. அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கவுரவம் என்று நான் கருதுகிறேன். ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். “you have done your best Viji, RIP” என்று அதில் ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார்.