நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவையொட்டி எராளமான நடிகர்கள், நடிகைகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நேற்று மாலை விஜயகாந்தின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதிலும் எராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டு, தங்களது அஞ்சலியை விஜயகாந்தின் படத்திற்கு செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்த் குறித்து நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், விஷால், சிவக்குமார், சந்திரசேகர், எம்எஸ் பாஸ்கர், சச்சு, வடிவுக்கரசி, தேவயானி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அமைத்து அதற்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்கு விஜயகாந்திற்கு மரியாதை செலுத்திய நடிகர் ஜெயம் ரவியும் விஜயகாந்த் குறித்து பேச முடியாமல் திணறினார். அவரது பேச்சு மிகவும் உருக்கமாக அமைந்தது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, எல்லாரும் இறந்தால்தான் கடவுள் ஆவார்கள். சிலர்தான் வாழும்போதே கடவுள் ஆவார்கள், அதுபோன்றவர்தான் கேப்டன் விஜயகாந்த் என்று தெரிவித்தார். அவர்குறித்த பல அனுபவங்கள் தனக்கு இருந்தாலும் அதை ஷேர் செய்யக்கூட தோன்றவில்லை என்றும் தானே தன்னுடைய இதயத்தில் வைத்துக் கொள்வதாகவும் ஜெயம்ரவி குறிப்பிட்டார். ஆனால் அவர் நமக்காக அதிகமான விஷயங்களை ஷேர் செய்துள்ளதாகவும் அதிகமாக நமக்காக விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் ஜெயம்ரவி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளி பாடப்புத்தகங்களில் கேப்டனின் வாழ்க்கை குறித்து வர வேண்டும் என்பதே தன்னுடைய கோரிக்கை என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டார். ஒரு நடிகராக, அரசியல்வாதியாக அவரின் வாழ்க்கை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று தான் கேட்கவில்லை என்றும், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவரை குறிப்பிட வேண்டும் என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டார். மற்றபடி அவர்குறித்து பேச வார்த்தைகள் வரவில்லை என்று குறிப்பிட்ட ஜெயம்ரவி, விஜயகாந்த் வார்த்தைகளையே தானும் குறிப்பிட விரும்புவதாக, சத்ரியனுக்கு சாவில்லை என்றுகூறி தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.