இயக்குநர் பா.ரஞ்சித், “அயோத்தி சென்ற ரஜினி கூறிய பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.
இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது:-
நான் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லோரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் வசனங்கள் நன்றாக உள்ளது. பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். நடிகர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இயக்குநர் ஜெய்யும், நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
ஜெய் தொடக்கத்தில் அனிமேஷன் படம் இயக்கப்போவதாக சொன்னார். பின்னர் ‘காலா’ படத்தில் உதவி இயக்குநராக ஜெய் பணியாற்றினார். நண்பன் உதவி இயக்குநராக இருந்தது சங்கடமாக இருந்தது. 2 படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய பின் இப்போது படம் இயக்கியிருக்கிறார். சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்ட மனிதர் ஜெய். ‘நீ படம் எடு. நான் தயாரிக்கிறேன்’ என சொன்னேன். அதன்பிறகு தான் இந்தப் படத்தை தொடங்கினோம்.
இன்று மிக முக்கியமான நாள். வீட்டில் கற்பூரம் கொளுத்தவில்லை என்றால் நாம் எல்லாம் இன்று தீவிரவாதிகள்தான். அந்த அளவுக்கு பயங்கரமாக போய்கொண்டு உள்ளது. ரொம்ப தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும், 5, 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்பாக நம்மை நாமே பண்படுத்திக்கொள்ள வேண்டும். மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும், மதவாதத்தையும் அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கலையை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறோம். பிற்போக்குத்தனங்களை கலை அழிக்கும் என நம்புகிறோம். இந்தியாவை மோசமான காலக்கட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை நாம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பா.ரஞ்சித் கூறியதாவது:-
ராமர் கோயில் திறப்புக்கு பின்னால் இருக்கும் மத அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது. மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. கோயில் கூடாது என்பது நமது பிரச்சினையில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பது தான் நம் கவலை. இந்தியாவில் இப்படி ஒரு கோயில் திறப்பது அரசியலாக்குவதுதான் சிக்கல்.
நடிகர் ரஜினிகாந்த் கோயிலுக்குச் சென்றது அவருடைய விருப்பம். ஆனால், 500 ஆண்டுகள் பிரச்சினை தீர்ந்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவர் கூறியது சரியா, தவறா என்பதைத் தாண்டி அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மோசமானது. ராஜஸ்தானில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி புறக்கணிக்கப்பட்டு அதில் பிரசாதம் வழங்கக்கூடாது என்ற வந்த செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அந்த செய்தி உண்மையாக இருந்தால் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.