ராமர் கோயில் திறப்பு நிகழ்வு என்பது ஆன்மிகம் சார்ந்ததே: ரஜினிகாந்த்!

“ராமர் கோயில் திறப்பு நிகழ்வு என்பது ஆன்மிகம் சார்ந்ததே” என்று அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைலாகின. தொடர்ந்து “இனி வருடா வருடம் ராமர் கோயிலுக்கு வருவேன்” என்றும் அயோத்தியில் ரஜினி பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிறப்பான முறையில் தரிசனம் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் திறந்ததும் முதலில் பார்த்த 150 – 200 நபர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு தான்” என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள், இந்தியா முழுவதும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டிய சூழலில் இது மத அரசியலை முன்னிறுத்தும் நிகழ்வு என கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, “ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு மாதிரி இருக்கும். எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. அது அவரவர்களின் சொந்த கருத்து. என் பார்வையில் இது ஆன்மிகம் சார்ந்ததே” என்றார்.