பிரபல பாடகி பவதாரிணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜவின் மகளான பவதாரிணி, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்படும் என தெரிகிறது.

மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’ உட்பட பல படங்களில் பாடியுள்ளார்.

நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ர் மை பிரண்ட்’ , ‘பிர் மிலேங்கே’ ஆகிய இந்திப்படங்களுக்கும் தமிழில் இலக்கணம், அமிர்தம் உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பவதாரிணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: பவதாரிணி இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. ‘பாரதி’ திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, எம்.பி. அவர்களின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி ராஜா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரணி அவர்கள். வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரணி அவர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பவதாரணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா அவர்களுக்கும், அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: பவதாரணியை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பவதாரிணி மறைந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இளம் வயதிலேயே தேசிய விருது வென்றவர். அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இயக்குனர் பா.ரஞ்சித், “சகோதரி, இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என எக்ஸ் தளத்தில் டுவீட் செய்துள்ளார்.