திருப்பதியில் நடிகர் தனுஷ் படத்தின் படப்பிடிப்பிற்கு போலீசார் திடீர் தடை!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் படடிப்பிடிக்கு வழங்கிய அனுமதியை போலீசார் திரும்ப பெற்றுள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுகிறது. கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தான் இயக்கி நடிக்கும் படம் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 51 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சேகர் கமூலா இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிஎன்எஸ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று காலை நடைபெற்றது. படப்பிடிப்பு நடைபெற்றதால் போலீசார் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்கள் என திருப்பதி மலைக்கு சென்ற வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பிவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடுமையான டிராபிக்கும் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. சினிமா படப்பிடிப்புக்காக போக்குவரத்தை மாற்றிவிட்டதற்கு வாகன ஓட்டிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கு திருப்பதியில் வழங்கப்பட்ட படப்பிடிப்புக்கான அனுமதியை போலீசார் ரத்து செய்துள்ளனர்.

முன்னதாக தனுஷ் படத்திற்கு அனுமதி தரக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் மனு தெரிவித்து இருந்தனர். இது குறித்து போலீஸ் எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி கூறுகையில், போக்குவரத்து இடையூறு, பக்தர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு திருப்பதியில் தனுஷ் படத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.