நடிகர் தனுஷின் இயக்கத்தில் தற்போது ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி மாஸ் காட்டியது கேப்டன் மில்லர் படம். சுதந்திர போராட்ட காலக்கட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தை அடுத்து தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். அவரது ராயன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் தனுஷ். இதில் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள போதிலும் படத்தில் தனுஷிற்கு ஜோடியில்லை என்று கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் மற்றும் பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ், தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டவர்களின் கேரக்டர் லுக் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் காட்டினார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுசுடன் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் இடம் பெற்றிருந்தனர். இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை கருப்பு வெள்ளையில் வெளியிட்டதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில் படத்தில் தனுசுடன் இணைந்து நடித்துள்ள காளிதாஸ், தனுஷுடன் இணைந்து நடித்த தன்னுடைய அனுபவம் குறித்து பேசி உள்ளார். தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷை அதிகமாக டார்ச்சர் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது முந்தைய படத்தின் காட்சிகள் குறித்து தான் அடிக்கடி கேள்வி கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தனுஷ் கூலாக காளிதாஸ் நான் இப்போது சூட்டிங் செய்து கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்ததாகவும் காளிதாஸ் தெரிவித்துள்ளார். தனுஷுடன் தான் இணைந்து நடித்த அனுபவத்தை மிகவும் பெருமையாக குறிப்பிட்டுள்ளார் காளிதாஸ். கமல் சாரை எப்படி பார்க்கிறேனோ அப்படித்தான் தனுஷையும் தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரோட சேர்ந்து நடித்துள்ளது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் கனவு நனவான தருணம் என்றும் தெரிவித்துள்ள காளிதாஸ், தனுஷ் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் வெயிட்டிங் என்றும் தெரிவித்துள்ளார்.