நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி!

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அந்த போர்ஷன் முடிந்து சென்னைக்கு திரும்பினார். கடந்த மார்ச் 2ம் தேதி தனது மகன் பிறந்தநாளை முன்னிட்டு கால்பந்து வடிவ கேக்கை எல்லாம் வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை அஜித் குமார் கொண்டாடினார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்குத் தான் நடிகர் அஜித் குமார் அப்போலா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர். மேலும், அஜித் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்றும் அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், படக்குழு கடந்த மாதம் சென்னை திரும்பியது. நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றிருக்கிறாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.