லால் சலாம் தோல்விக்கு எடிட்டிங் சொதப்பலே காரணம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

லால் சலாம் திரைப்படத்தின் தோல்விக்கு கடைசி இரண்டு நாட்களில் தான் செய்த எடிட்டிங் சொதப்பலே காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக அளித்துள்ள பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மகளை நம்பி தனது கால் சீட்டை ரஜினிகாந்த் ஒதுக்கி கொடுத்த நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்ற நடிகர்களை ஹீரோக்களாக வைத்து செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவானது. மொய்தின் பாயாக ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தனுஷின் 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குநராக லால் சலாம் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பா ரஜினிகாந்தை மொய்தின் பாயாக நடிக்க வைத்து மோசம் செய்ததுதான் மிச்சம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராக பெரும் போராட்டத்திற்கு பிறகு மாறிய நிலையில் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக லால் சலாம் படத்தை கொடுத்திருந்தார். தேசிய விருது வாங்கப் போகிற கதை, உண்மை சம்பவம் என்றெல்லாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். ஆனால், படத்தைப் பார்க்க யாருக்கும் அந்த ஃபீல் வரவே இல்லை என்பதுதான் படத்தின் தோல்விக்கான காரணம் என பலரும் கூறினர். தன்னுடைய கதையில் இடைவேளைக்கு பிறகுதான் மொய்தீன் பாய் கதாபாத்திரம் வருவதாக இருந்தது. ஆனால், கமர்சியலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதலிலேயே காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்ட நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் கடைசி இரண்டு நாட்களில் எடிட்டிங் டேபிளில் வந்து மொய்தீன் பாய் காட்சிகளை கொஞ்சம் முன்னாடி கொண்டுவந்ததுதான் இந்த படத்தில் நான் செய்த பெரிய தவறு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தான் இயக்க விரும்பிய லால் சலாம் படத்தில் செந்தில் கதாபாத்திரம்தான் கதையின் நாயகனாக இருந்தது. ஆனால், எப்போது அந்த படத்திற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளே நுழைந்தாரோ, அதன் பிறகு ரசிகர்கள் கதையை விட்டுவிட்டு மொய்தீன் பாயை பார்க்கத் தொடங்கியதும் ரசிக்கத் தொடங்கியது தான் இந்த படம் தோல்வி அடைய காரணம் எனக் கூறியுள்ளார்.