அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கும் அமீர்: மற்றுமொரு வழக்கு பதிவு!

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக் இறைவன் மிகப் பெரியவன் படத்தை தயாரித்த நிலையில், இப்படத்தை அமீர் இயக்கி வருவது பற்றி தெரிய வந்திருக்கிறது. இதனால் அமீருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு வழக்கு அவர் மீது போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூன்று ஆண்டுகளாக மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், ஏற்கனவே சில தமிழ் திரைப்படங்களை தயாரித்திருந்த நிலையில், தற்போது மங்கை என்ற படத்தையும் தயாரித்திருந்தார். கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள மங்கை முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தல் பணத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெற்றிமாறன் அமீர் ஆகியோர் வெளியிட்டனர். அதே போல பாடலை உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி வெளியிட்டதால், இவர்களின் பெயரும் போதை பொருள் வழக்கில் அடிப்பட்டது.

அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப்பெரியவன் படத்தையும் ஜாபர் சாதிக் தான் தயாரிப்பதால், இயக்குநர் அமீர் குறித்தும் சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இது குறித்து விளக்கம் கொடுத்த அமீர், கடந்த இரண்டு நாட்களாக, எனது இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22ந் தேதி நான் இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர் என்றும், இதுகுறித்து விசாரணைக்கு அழைத்தாலும் வரத் தயாராகவே உள்ளேன் எனக் கூறியிருந்தார்.

இப்படி அமீர் சுற்றி பல பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் ஞானவேல் ராஜாவின் அப்பா வி.கே. ஈஸ்வரன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனைக்குள்ளான வி.கே. ஈஸ்வரன், அமீர் மீது மான நஷ்ட வழக்கை தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்குடன் அமீர் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளது.