நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
அஜித்தின் 63-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (மார்ச் 15) வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்துக்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘வில்லன்’ மற்றும் ‘ரெட்’ ஆகிய படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதன் பிறகு, ’அட்டகாசம்’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அசல்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ‘வலிமை’, ‘துணிவு’ என ஆங்கில தலைப்பை தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ என டைட்டில் இருப்பதால் படத்தில் கண்டிப்பாக மூன்று அஜித் இருப்பார்கள். டைட்டிலே மரண மாஸா இருக்கு என்றெல்லாம் ஏகே ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். நீண்ட காலமாக அஜித் பட அப்டேட்டிற்காக தவம் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு அமர்க்களமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், அதனை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தினை இயக்கினார். இப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அண்மையில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மூலமாக தரமான கம்பேக் கொடுத்தார்.
இதனையடுத்து தற்போது அஜித்தை இயக்கவுள்ளார். மேலும், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த ஆதிக், ஏகேவின் தீவிரமான ரசிகரும் கூட. ‘மார்க் ஆண்டனி’ பட வெற்றியையே அஜித்துக்கு அர்ப்பணிப்பு செய்வதாக தெரிவித்து இருந்தார். இப்படி தனது தீவிரமான ரசிகராக இருப்பவர் இயக்கத்தில் அஜித் நடிக்க போவது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனால் ‘குட் பேட் அக்லி’ தரமான பேன் பாய் சம்பவமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் இப்போதே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.