காதலில் தோல்வியுற்ற பெண்ணாக புதிய படத்தில் நித்யா மேனன்!

தமிழ் சினிமாவில் யாரும் நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார்.
நித்யா மேனன். நித்யா மேனன், காதலில் தோல்வியுற்ற பெண்ணாக புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கர்நாடகாவில் பெங்களூரு நகரில் மலையாளி பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர், நித்யா மேனன். பள்ளிப்படிப்பை பெங்களூருவில் இருக்கும் பூர்ணா பிரஜனா பள்ளியிலும், மவுன்ட் கார்மல் கல்லூரியிலும் படித்து முடித்தவர். சிறுவயதில் பைலட் ஆக ஆசைப்பட்ட நித்யா மேனன், 1998ஆம் ஆண்டு அனுமன் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின், கன்னடத்தில் 2006ஆம் ஆண்டு 7’0 கிளாக், மலையாளத்தில் ஆகாஷ கோபுரம் ஆகியப் படங்களில் நடித்தார். அதன்பின், ஜோஷ், வெள்ளத்தூவல், கேரள கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வாராகம், அன்வர், உருமி, ஆகிய மலையாளப் படத்திலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின், 2011ஆம் ஆண்டு தமிழில் சித்தார்த்துடன் 180 என்னும் படம் மூலம் அறிமுகமான அவர், அதன்பின், வெப்பம் ஆகியப் படங்களில் நடித்தார். இடையில் மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாவில் மாறி, மாறி நடித்துவந்தார். அதன்பின், தமிழில் 2014ஆம் ஆண்டு மாலினி 22 பாளையங்கோட்டை, 2015ஆம் ஆண்டு ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, முடிஞ்சா இவனை பிடி, இருமுகன், மெர்ஷல், திருச்சிற்றம்பலம் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இடையிடையே தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் எழுதி இயக்கும் தனது ஐம்பதாவது படமான ராயன் படத்திலும் முக்கிய ரோலில் நித்யா மேனன் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்தாண்டு தெலுங்கில் குமாரி ஸ்ரீமதி என்னும் வெப் சீரிஸிலும், மாஸ்டர் பீஸ் என்னும் மலையாள வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படங்களில் தேர்ந்து எடுத்து நடித்துவரும் நித்யா மேனன், பல பெரிய படங்களின் படங்களிலும் அசால்ட்டாக ரிஜெக்ட் செய்வார். இதுதொடர்பாக தெலுங்கில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்படம் நிச்சயம் ஹிட் அடித்து விடும் என்று நிச்சயம் தெரியும். இருந்தாலும், எனக்கு கதையும் என் கதாபாத்திரத்துக்குண்டான முக்கியத்தைப் பொறுத்தே ஒவ்வொரு படங்களிலும் நடித்து வருகின்றேன் என்றார். தவிர, ஸ்கை லேப் என்னும் காமெடி கலந்த கதையம்சம் கொண்ட படத்தையும் தெலுங்கில் தயாரித்து இருந்தார், நித்யா மேனன்.

நித்யா மேனனுக்கு தாய் மொழியான மலையாளம் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, தமிழ்,இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேச முடியும் என்பது அவரை தென்னிந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக மாற்றியுள்ளது. தவிர, நல்ல வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், பாடகியாகவும் இருக்கிறார், நித்யா மேனன்.

திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது பேசிய தனுஷ், நடிகை நித்யா மேனன் ஒரு நல்ல நடிகை என்பதைத்தாண்டி, எனது மிகச்சிறந்த தோழி என்றும்; சில முடிவுகளை அவரைக் கேட்டு தான் எடுப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக இருந்த காமினி என்பவரது இயக்கத்தில் நடித்து வருகிறார், நித்யா மேனன். அவருடன் வினய் ராய், நவ்தீப் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் காதலில் தோல்வி அடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், நித்யா மேனன். இதுவரை ஆண்களின் காதலை மையப்படுத்தியே தமிழ் சினிமாவில் படங்கள் இதுவரை வந்துள்ளன. அந்தவகையில், இந்த கதைக்களம் தமிழுக்கு புதுசு. அதனை சிறப்பாக செய்ய இருக்கிறார், நித்யா மேனன். இப்படத்தை பிஜிஎன் நிறுவனம், ராம்கி, ஆதித்ய அஜய் சிங் ஆகிய மூவரும் தயாரிக்கின்றனர்.