நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஜீசஸ் குடிக்கலையா? எனக் கேட்டதாக சர்ச்சை வெடித்தது. விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு கிருஸ்தவ சபையினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
நான் படத்தின் மூலம் நடிகராக மாறிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அடுத்ததாக ரோமியோ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் புரமோஷனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. நடிகர்களை பற்றிய கிசுகிசுக்கள் தேவை தான் என்றும் நடிகர்களை பிரபலமாக்க பத்திரிகையாளர்கள் ரொம்பவே போராடி வருகின்றனர் என்றும் விஜய் ஆண்டனி அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். மேலும், ஹீரோயின் ஏன் குடிக்கிறாங்க நீங்க அதற்கு ஆதரவு தெரிவிக்கிறீங்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த நிலையில் தான் இந்த சர்ச்சை வெடித்தது.
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ரோமியோ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறது. அந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற விஜய் ஆண்டனியிடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதலிரவில் ஹீரோயின் சரக்கடிப்பது போல ஏன் வைத்தீர்கள் என கேட்கப்பட்டது.
பெண்கள் குடிப்பது போல படம் எடுக்கலாமா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, உடனடியாக விஜய் ஆண்டனி ஆண்கள் மட்டும் தான் குடிக்க வேண்டுமா? மது குடிப்பது பொதுவானது. ஆண்கள் ஒரு விஷயத்தை செய்தால் அதை பெண்களும் தாராளமாக செய்யலாம். பெண்கள் குடிக்கக் கூடாது என்று எல்லாம் பேசக் கூடாது அந்த காலத்திலேயே மது என்பது பல வடிவங்களில் இருந்தது. ஜீசஸ் குடிக்கலையா? அவர் குடித்த திராட்சை ரசமும் மது தானே என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
கிறிஸ்தவ சபை கண்டனம்: விஜய் ஆண்டனி தனது படத்தின் புரமோஷனுக்காக ஏசுவை இழிவுப்படுத்தி ஏன் பேச வேண்டும் என்றும் இப்படி பேசுவது தவறான ஒன்று என்றும் இதற்கு அவர் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என கிறிஸ்துவ சபையில் இருந்து விஜய் ஆண்டனிக்கு கண்டனம் பறந்தது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம்.. நான் நேற்று முன் தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசுபிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறியிருந்தேன்.
ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தம் படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.” என பதிவிட்டுள்ளார்.