எனது நேரத்தை வீணாக கழிக்க விரும்பவில்லை: அனுராக் காஷ்யப்

தனது நேரத்தை வீணாக கழிக்க விரும்பவில்லையென்று நடிகர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனரும், நடிகருமானவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘லியோ’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் தன்னை ரசிகர்கள் யாராவது சந்திக்க விரும்பினால் உரிய கட்டணத்தை செலுத்திவிட்டு தன்னுடன் நேரத்தை கழிக்கலாம் என்று அனுராக் காஷ்யப் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பொதுவாகவே எனது நேரத்தை நான் வீணாக கழிக்க விரும்பவில்லை. எனவே என்னை சந்திக்க விரும்புவோருக்காக, ஒரு பயனுள்ள நடவடிக்கையை நான் மேற்கொள்ளவுள்ளேன். அதன்படி என்னை யாராவது சந்திக்க விரும்பினால் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை சந்திக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சமும், அரை மணி நேரத்துக்கு ரூ.2 லட்சமும், ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சமும் கட்டணமாக வசூலிக்க இருக்கிறேன். இத்தொகை முன்கூட்டியே வசூலிக்கப்படும். நிறைய பேரை அடிக்கடி சந்தித்து எனது நேரத்தை வீணாக்கி வருகிறேன். இதை மாற்றவேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அனுராக் காஷ்யப் கூறியிருக்கிறார்.