நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது. நீதிமன்றத்தால் இதுபோன்ற தவறுகள் நடந்தால், அதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் தான் பலத்தை இழக்கின்றனர் என்று பாவனா தெரிவித்துள்ளார்.
கடந்த 2017இல் நிகழ்ந்த மலையாள சினிமா நடிகை பாவனாவுக்கு எதிரான நடந்த துன்புறுத்தல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சி அடையசெய்த சம்பவமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கின் பிரதமான சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது. அதில்தான் நடிகை மீதான நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகள் இடம்பிடித்திருந்தன. இதையடுத்து நீதிமன்ற காவலில் இருந்த மெமரி கார்டை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது குறித்து சிறப்பு விசாரணை நடத்தக் கோரி பாவனா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக நடிகை தனது சமூக வலைத்தளபக்கத்தில், நீதிமன்றத்திலும் சட்டவிரோத அணுகல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்திருப்பது பயத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாவனா தனது தாய்மொழியான மலையாளத்தில் பகிர்ந்திருக்கும் நீண்ட பதிவில், “விசாரணை தொடர்பாக நகலுக்காக மெமரி கார்டு அணுகலை வழங்க வேண்டும் என செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனியுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு (அதில் காட்சி ஆதாரம் உள்ளது) பல முறை மாற்றப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது. நீதிமன்றத்தால் இதுபோன்ற தவறுகள் நடந்தால், அதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் தான் பலத்தை இழக்கின்றனர். மறுபுறம், தவறு இழைப்பவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும், இது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.