ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் மனுதாரருக்கு ரூ.67,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி சென்னையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வதற்காக 12 ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட் பெற்றுள்ளார். ஆனால் அந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேதியில் தன்னால் கலந்து கொள்ள முடியாததால், டிக்கெட்டுக்காக செலுத்திய தொகையை திருப்பி தருமாறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்துவிட்டு இதுவரை தனது பணத்தை திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறி கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அஸ்வின் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் மனுதாரருக்கு டிக்கெட் தொகை ரூ.12,000, சேவை குறைபாட்டிற்கான இழப்பீடு ரூ.50,000 ஆயிரம் மற்றும் செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் 67 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏ.சி.டி.சி. நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்களது தரப்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்காத நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.