“புஷ்பா திரைப்படத்தால் என்னுடைய திரையுலக பயணத்தில் எந்தத் தாக்கமும் நிகழவில்லை” என நடிகர் ஃபஹத் ஃபாசில் பேசியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக ஃபஹத் ஃபாசில் அண்மையில் பேட்டியில், “புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அங்கீகாரத்தை அளித்துள்ளதே?” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “புஷ்பா திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. இதை நான் இயக்குநர் சுகுமாரிடமே கூறியுள்ளேன். இதில் மறைக்க ஒன்றுமில்லை. நான் நேர்மையாக எனது கடமையைச் செய்கிறேன். எதையும் அவமதிக்கவில்லை. புஷ்பாவுக்குப் பிறகு ரசிகர்கள் என்னிடம் மேஜிக்கை எதிர்பார்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. இது முழுக்க முழுக்க இயக்குநர் சுகுமாரின் அன்புக்காக செய்த படம். என்னுடைய முழு கவனமும் மலையாள சினிமாவில் தான் உள்ளது” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும், “விக்கி கவுசல், ராஜ்குமார் ராவ், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரும் இந்தியாவின் சிறந்த நடிகர்களாக வலம் வருகிறார்கள். அப்படியிருக்கும்போது ரசிகர்கள் என்னிடம் என்ன தனித்துவத்தை கண்டறிந்தார்கள் என தெரியவில்லை. பார்வையாளர்கள் இங்கிருந்து சினிமாவை பின்தொடர்கிறார்கள் என்பதும், அவர்கள் ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ட்ரான்ஸ்’ படங்களை பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. நடிகர்கள், நடிப்பு எல்லாவற்றையும் தாண்டி, தங்களை இணைக்கும் கலை வடிவத்தை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என நான் நம்புகிறேன்” என்றார் ஃபகத் ஃபாசில்.