ஓடிடியில் சென்சார் போர்டு என்ற ஒன்று கிடையாது: மாளவிகா!

ஓடிடியில் சென்சார் போர்டு என்ற ஒன்று கிடையாது. அதனால் அவர்கள் எல்லா விதமான படங்களையும் அப்பட்டமாக காண்பிக்கிறார்கள் என்று நடிகை மாளவிகா கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

என்னை பொருத்தவரை சினிமாவில் நான் யாருடனும், அசெளகரியமாக உணர்ந்தது கிடையாது. உண்மையில் தமிழ் நடிகர்கள் மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என எல்லோரிடமும் எனக்கு நல்ல ஒரு சௌகரியமான சூழ்நிலையே நிலவியது. நான் மிகவும் நிம்மதியாக அவர்களுடன் வேலை செய்தேன். அதனால், எனக்கு தமிழ் சினிமாவில் அசெளகரியம் தரக்கூடிய எந்த ஒரு மோசமான அனுபவமும் நிகழவில்லை. நான் என்னுடைய கேரியரில் இரண்டு படங்களுக்கு மிகவும், ஆவலாகவும் சந்தோஷமாகவும், படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறேன். ஒன்று கார்த்திக் சாருடன் நடித்த லவ்லி திரைப்படம். இன்னொன்று அப்பாஸூடன் நடித்த திருட்டுப் பயலே.

திருட்டுப் பயலே திரைப்படத்தில், எனக்கு வில்லி போன்ற கதாபாத்திரம் கிடைத்திருந்தது. நான் அந்த கேரக்டரை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று நடித்தேன். அந்தப் படத்தில் அப்பாஸூடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் நான் மிகவும் சௌகரியமாக நடித்தேன்.
காரணம் என்னவென்றால், அப்பாஸ் என்னுடைய நெருங்கிய நண்பர். அந்த இடத்தில் வேறு எந்த கதாநாயகன் இருந்தாலும், என்னால் அவருடன் நடித்தது போன்று, மிகவும் சௌகரியமாக நடித்திருக்க முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான். நானும் அம்பாஸூம் முன்பிருந்தே நன்றாக பழகி வந்திருந்தோம். இரண்டு பேரும் நிறைய பார்ட்டிகளில் சந்தித்து இருக்கிறோம்.

இன்று நெருக்கமான காட்சிகள் மிகவும் இயல்பாக படங்களில் இடம் பெறுகின்றன. ஓடிடியில் சென்சார் போர்டு என்ற ஒன்று கிடையாது. அதனால் அவர்கள் எல்லா விதமான படங்களையும் அப்பட்டமாக காண்பிக்கிறார்கள். அதில் ஒரு வரம்பே இல்லாமல் இருக்கிறது. அத்துடன் மோசமான வார்த்தைகளும் அதில் இடம்பெறுகின்றன. ஆனால் இதுவெல்லாம் அப்போது பெரிதாக கிடையாது. இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது நெருக்கமான காட்சிகளும் படத்தில் இடம் பெறவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.