கமல்ஹாசன், விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட பணிகள் பல மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கிய சூழலில் தொடர்ந்து இந்த கட்டிட பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் 40 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக சங்கத்தின் சார்பில் தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது. வங்கியில் கடன் பெற உள்ளதாக சமீபத்தில் நடந்த இந்த சங்கத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் தொடர்ந்து இந்த சங்க கட்டிட பணிகளுக்காக நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தென்னிந்திய சங்க கட்டிடப் பணிகளுக்காக தற்போது ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். நடிகர் நாசரை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை அவர் வழங்கியுள்ளார். இதையடுத்து அவருக்கு சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.