ஒரு சிம்பொனியை 35 நாள்களில் முழுமையாக எழுதி முடித்தேன்: இளையராஜா!

ஒரு சிம்பொனியை 35 நாள்களில் முழுமையாக எழுதி முடித்தேன் என்று இளையராஜா மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர். நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இன்று இளையராஜா மகிழ்ச்சியாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” கடந்த ஒரு மாதமாக என்னைப் பற்றிய நிறைய விடியோக்கள் வருவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் எதையும் பார்க்கவில்லை. மற்றவர்களைக் கவனிப்பது என் வேலையில்லை. நான் என் வழியில் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிற வேளையில், ஒரு சிம்பொனியை 35 நாள்களில் முழுமையாக எழுதி முடித்தேன். எனக்கு சந்தோஷமான விஷயம் இது. திரையிசை, பின்னணி இசையெல்லாம் கலக்காத ஒன்றே சிம்பொனி. அதை எழுதி முடித்ததை என் ரசிகர்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.