பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சத்யராஜே விளக்கம் அளித்திருக்கிறார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ் ஆரம்பத்தில் ரஜினி கமல் உள்ளிட்டோருக்கு வில்லனாக நடித்து, தொடர்ந்து கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, வில்லாதி வில்லன் , நாள் அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட பல வெற்றி படங்களை நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்தார். மேலும் பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் தனது கனமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றவர். தொடர்ந்து தனது மகனை கதாநாயகனாக தமிழ் சினிமாவில் களமிறக்கி அவர் தற்போது இளம் நடிகர்களுக்கு தந்தையாகவும் குணசித்திர பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக ராஜமவுளி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான பாகுபலி படத்தின் கட்டப்பா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமான அவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையிலிருந்து நடிகர் சத்யராஜின் பெயர்தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரதமரின் பாத்திரத்தில் நடிகர் சத்தியராஜ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி நடிப்பில் பல படங்கள் வந்திருக்கும் நிலையில் பாலிியூட்டில் உருவாகும் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் முன்னோட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே தனது படங்களில் கடவுள் மறுப்பு சாதி மறுப்பு உள்ளிட்ட பெரியாரியக் கொள்கைகளை பேசி வரும் நடிகர் சத்யராஜ் பாஜகவை விமர்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதே நேரத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் இந்த தகவல் உண்மைதான் என அவரது மகள் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்து குறித்து நடிகர் சத்தியராஜே விளக்கம் அளித்து இருக்கிறார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசி இருக்கும் அவர், “பிரதமர் நரேந்திர மோடி பாத்திரத்தில் நான் நடிப்பதாக வரும் தகவல் சமூக ஊடகங்கள் மூலம் தான் தெரிய வந்திருக்கிறது. இது எனக்கு புதிய செய்திதான். அதே நேரத்தில் பெரியார் வேடத்தில் நடித்த நான் மோடி வேடத்தில் நடிக்கலாமா என கேட்கிறார்கள். பல படங்களில் நாத்திகம் பேசிய நாத்திகரான எம்.ஆர்.ராதா ஆன்மீகவாதியாகவும் நடித்திருக்கிறார். இந்த வாய்ப்பு வந்தால் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.