தமிழ் படங்களின் தலைப்பை பார்த்து துக்கப்படுகிறேன்: வைரமுத்து!

‘பனை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, தமிழ் படங்களின் தலைப்பை பார்த்து துக்கப்படுகிறேன், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

‘பனை’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில், நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து இசை தட்டை வெளியிட அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பெற்றுக்கொண்டார். இதையடுத்து பேசிய வைரமுத்து கூறியதாவது:-

இப்போது தமிழ் திரைப்படங்களில் வரும் பெயரைப் பார்த்து நான் துக்கப்படுகிறேன், சில நேரங்களில் நான் வெட்கமும் படுகிறேன். அந்த பெயரை குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை. அது வெறும் சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம், தமிழில் தலைப்புகளுக்கா பஞ்சம், தமிழில் சொல்லாடல்களுக்கா பஞ்சம், நல்ல பெயர்களை தனித்துவமான பெயரை ஏன் நீங்கள் சூடக்கூடாது என்று பார்க்கிறேன். பத்திரிக்கைகளில் அந்த அதிகாலை செய்திகளில் படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு,அடுத்த பக்கத்திற்கு செல்வதற்குள், ஒரு மின்னலைப்போல் ஒரு நொடியில் என் மூளையைக் கடந்து முடிந்துவிடுவதை பார்க்கிறேன். தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா? என் இதயத்தில் பசைபோட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா.. நா திருப்பி உச்சரிக்க வேண்டாமா?

ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு ஒரு கருத்தை சொல்வதாகவும், இன்னொன்னு காட்சியை விரியச் செய்வதமாகவும், அது குறித்த ஆர்வத்தை துண்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதால்தான், நம் முன்னோர்கள் எல்லாம் தமிழில் தலைப்பு வைத்தார்கள். தலைப்பு வைக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களை படத்திற்கு சூட்டவேண்டும் என்று நான் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு கவிஞனின் வேண்டுகோள் அல்லது பாடல் ஆசிரியரின் வேண்டுகோள் என்று நினைத்து விடாதீர்கள், இது தமிழ் மக்களின் வேண்டுகோள், பாமரனின் வேண்டுகோள், உழவனின் வேண்டுகோள், அவர்கள் தமிழோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.. நீங்கள் தள்ளி நிற்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.