பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், தனியாக சாப்பிடுங்கள், தனியாக வாழப்பழகுங்கள், இதயத்தோடு பேசுங்கள் என்று வாழ்க்கையின் தத்துவத்தை பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
இயக்குநராக இருந்த செல்வராகவன் பீஸ்ட் படத்தில் நடிகராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கினார். பெரும் பில்டப்புக்கு மத்தியில் வெளியாகி இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை. தற்போது இவர் எந்தவொரு படத்திலும் தலை காட்டாமல் இருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
இந்த உலகத்தில் இருக்கும் ஆண்கள் பெண்கள், கல்யாணம் ஆனவர்கள், கல்யாணம் செய்து கொள்ளாதவர்கள் என எல்லாருக்கும் ஒரு கனவு தான், நமக்குனு ஒருத்தனோ, ஒருத்தியோ வருவாங்க, நம்மை நல்லா புரிஞ்சிப்பாங்க, நம்மை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு ராதா வருவாங்களே அந்த மாதிரி, நீங்க என்ன தேடி, சுற்றி யாரோ ஒருவரை பிடித்துவிட்டால் கூட, கடைசி வரைக்கும் உங்களுக்கு அப்படி ஒருத்தர் கிடைக்க மாட்டார். அப்படி கிடைச்சாலும் ஒருநாள் அது மாறும், நாம நினைச்சது இது இல்லையே என்று மண்டையை போட்டு உடைத்துக்கொள்வீர்கள், கடைசியில் எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிடுவீர்கள். இந்த நிலைமைக்கு வருவதற்கு முன்பே,என்னைக்காவது ஒரு நாள் கண்ணாடியை பாருங்க, அந்த கண்ணாடியில் தெரிவது நீங்க தான், நீங்கதான் உங்களுக்கு அமைதியை கொடுக்க முடியும், உங்களை சந்தோஷமா வைத்துக்கொள்ள முடியும், உங்களை மடியில் போட்டு தாலாட்ட முடியும்.
நாம் அனைவரும் கடவுள் எங்க, கடவுள் எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். அந்த கடவுள் நமது உடலில் ஒரு பகுதியா இதயத்தை நம்மிடம் கொடுத்து இருக்கிறார். அது நீ நல்லவன் என்று நினைத்தால் அது நல்லவனாக இருக்கும், கெட்டதா நினைச்சா கெட்டது. இது என் வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து சொல்கிறேன். நம் இதயத்தை தவிர சிறந்த ஒருத்தர் இல்லை. இதனால், தனியாக சாப்பிட்டு பழகுங்கள், தனியாக இருக்க பழகுங்கள். உங்களுக்கு பிடித்தமான இடத்தில் இதயத்தோடு பேசுங்கள், இதயம் உங்களிடம் திருப்பி பேசும், அதன் பிறகு ஒரு மேஜிக் நடக்கும் பாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.