நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனின் என்ட்ரியும், அவரது உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கருப்பு கலர் குர்தா அணிந்துகொண்டு, ‘பாரா’ பாடல் ஒலிக்க மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

நிகழ்வுக்குச் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஷங்கர், “முதன்முறையாக அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் படம்” என தெரிவித்தார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலிருந்து படத்துக்காக காத்திருக்கிறேன். எப்போதெல்லாம் கமல், ஷங்கர், அனிருத்தை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் படம் குறித்து அறிவிப்பை கேட்பேன். ‘விக்ரம்’ படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூட கமல், ‘இந்தியன்’ தாத்தா கெட்டப்பில் தான் இருந்தார். அவரின் அந்த முழு ஒப்பனைக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது” என்றார்.

இவ்விழாவில் சிம்பு உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். லோகேஷ் கனகராஜ், நெல்சன் என பல இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசியது தான் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் கூறியதாவது:-

நான் கமல் சாருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேலை செய்தேன். அப்போது அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கமல் சாரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன். தமிழில் எழுத்து பிழை இருந்தால் கமல் சாருக்கு பிடிக்காது. உடனே திட்டிவிடுவார். நானும் திட்டு வாங்கியிருக்கிறேன். ஆனால் கமல் சாரிடம் திட்டு வாங்கியதை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்றார் நெல்சன்.

மேலும் கோலமாவு கோகிலா படத்தின் போது கமல் சாரிடம் பேசியுள்ளேன். அப்போது அவர் தொழில்நுட்பம் சார்ந்த நிறைய விஷயங்களை பேசுவார். எனக்கு ஒன்றுமே புரியாது. எனவே. சார் நீங்க பேசியது எனக்கு ஒண்ணுமே புரியல என்றேன். அதற்கு அவர், உன் முகத்தை பார்த்தாலே தெரிகின்றது என்றார். இவ்வாறு நெல்சன் நேற்றைய நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் முதலில் ஜூன் மாதம் வெளியாவதாக இருந்த இந்தியன் 2 திரைப்படம் தற்போது ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போயிருக்கின்றது. ஜூலை 12 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.