ஷாலினி அஜித் பெயரில் வலம் வரும் சமூக வலைதள கணக்கு போலியானது!

நடிகர் அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் பெயரில் வலம் வரும் சமூக வலைதள கணக்கு போலியானது என்று ஷாலினி அதிரடியாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனந்த கும்மி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. பேபி ஷாலினி என பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது சகோதரி பேபி ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி உள்ளிட்டோரும் சிறு வயதில் இருந்து பல படங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேபி ஷாலினியாக நடித்து வந்த நடிகை ஷாலினி ஹீரோயினாக காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். காதலுக்கு மரியாதை திரைப்படம் நடிகை ஷாலினிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், அடுத்ததாக அஜித்தின் அமர்க்களம் படத்தில் நடித்தார். அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அமர்க்களம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடித்த அலைபாயுதே திரைப்படத்தில் செம ரொமாண்டிக்காக ஷாலினி நடித்திருப்பார். கடைசியாக பிரசாந்த் உடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் படத்தில் நடித்த ஷாலினி அஜித் உடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னர் படங்களின் நடிக்கவில்லை.

நடிகர் அஜித் குமாரை 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். நடிகை ஷாலினியின் தங்கையான ஷாமிலி மற்றும் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை. சமீபத்தில் ஷாலினி தனது அம்மாவின் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதே போல அஜித்துடன் 24வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடிய போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார்.

சினிமா பிரபலங்களின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டு அவர்கள் பதிவிடுவதை போலவே பதிவிடுவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ரசிகர்களும் அதை உண்மையான ஐடி என நம்பி ஏமாந்து ஃபாலோ செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு வைத்துள்ள நடிகை ஷாலினி ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கவில்லை. அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போஸ்ட்டுகளை அப்படியே காப்பி பேஸ்ட் அடித்து ட்விட்டரில் அவரது பெயரில் போலி கணக்கை தொடங்கி 80 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் கணக்கு தன்னுடைய கணக்கு இல்லை என்றும் அது போலியான கணக்கு என தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அலர்ட் செய்துள்ளார்.