அவரது (பிரதமர் மோடி) ஈகோவை உடைத்து, அவரது இடத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக நன்றிகள். இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம், என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
மொத்தம் 7 கட்டங்களாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடைபெற்ற இந்த மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 400 இடங்களைக் கைப்பற்றும் எனவும், பாஜக மட்டும் சுமார் 330 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்ததால், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனவும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் நாடு முழுவதும் பல தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்திருந்தாலும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும்போது பாஜக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளை பெறுவதற்கு பாஜக தொடர்ந்து போராடி வருகின்றது. அதேபோல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. இந்த கூட்டணிக்கு எதிராக வந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் இந்த கூட்டணி தவிடுபொடியாக்கி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், பல இடங்களில் வெற்றியைப் பெற்று வருகின்றது.
இந்நிலையில் நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியுள்ளார். அந்த பதிவில், “சக்ரவர்த்தி நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது தனித்து நடக்க முடியாது. அவருக்கு யாராவது உதவி செய்தால் மட்டுமே நடக்க முடியும். I.N.D.I.A கூட்டணிக்கும் அவர்களுக்கு வாக்களித்த பொறுப்பான நாட்டு மக்களுக்கும் நன்றி. அவரது (பிரதமர் மோடி) ஈகோவை உடைத்து, அவரது இடத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக நன்றிகள். இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம், இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் உடனிருப்போம்” என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. நடிகர் பிரகாஷ் ராஜ் இது மட்டும் இல்லாமல், மக்களவைத் தேர்தல் நடைபெற்ற காலங்களில் பிரதமரை மிகவும் காட்டமாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பிரதமரை “ மன்னாரு” என்ற அடைமொழியுடன் குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில்தான் இன்றை பதிவிலும் மான்னார் என பொருள் படக்கூடிய ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.