நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள விஜய்சேதுபதி கூடிய விரைவில் இயக்குநராகவும் ஆவேன் என்றும் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான பல படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் வெற்றி பெற்ற ஒரு நிலையில், வில்லனாக இனிமேல் தொடர மாட்டேன் என்றும் ஹீரோவாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி பேசியிருந்தார். தனது 50-வது படமான மகாராஜா படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி பீட்சா படத்தில் ஹீரோவான நிலையில், தொடர்ந்து கடினமாக உழைத்து குறுகிய காலத்தில் 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் விஜய் சேதுபதி நடித்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மகாராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பார்த்து பத்திரிகையாளர் ஒருவர் 200 கோடி, 1000 கோடி வசூல் படங்களில் எல்லாம் நடித்துள்ளீர்கள் என மாஸ்டர், ஜவான் உள்ளிட்ட படங்களை மனதில் வைத்து கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக பதில் அளித்த விஜய் சேதுபதி, 200 கோடி, 1000 கோடி எல்லாம் நான் பார்க்கலைங்க. இங்க பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துக் கொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை. ஆனால், தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துக் கொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை எனக் கூறியுள்ளார்.
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள விஜய்சேதுபதி கூடிய விரைவில் இயக்குநராகவும் ஆவேன் என்றும் கூறியுள்ளார். படம் இயக்குவது தனக்கு ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக மாறி வருகிறது. விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.