ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு இன்று பிறந்த நாள்!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ்குமார் இன்றைக்கு அதாவது ஜூன் 13ஆம் தேதி தனது, 37வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே சிறந்த ஓப்பனிங் கிடைத்தது. அப்படியான ஓப்பனிங்கிற்கு சொந்தக்காரர் ஜி.வி. பிரகாஷ் குமார். 90’ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தை விளக்கும் விதமாக ஒருபாடலைக் கூறுங்கள் என்று மைக்கை நீட்டினால் பெரும்பாலான 90’ஸ் கிட்ஸ்களின் முதல் தேர்வு வெயில் படத்தில் இடம்பெற்ற, “வெயிலோடு விளையாடி” பாடலாகத்தான் இருக்கும். இயக்குநர் வசந்த பாலனின் வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். ஆனால் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பாடல் பாடி, பாடகராக அறிமுகமாகியிருந்தார் இவர். ஜெண்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் வரும் குழந்தையின் குரல் ஜி.வி. பிரகாஷ் குமாருடையதுதான். வெயில் படத்தில் வெயிலோடு விளையாடி பாடல் மட்டும் இல்லாமல் உருகுதே உருகுதே பாடலும் எவர் கிரீன் ஹிட்.

அறிமுக படத்திலேயே பலரது பாராட்டைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ், ஓவர் நைட்டில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறிவிடவில்லை. தனக்கு வந்த பாராட்டுகளை தக்கவைத்துக் கொள்ள எடுத்த சிரத்தைகளின் வெளிப்பாடுதான், இன்றைக்கு அவருக்கான ப்ளே லிஸ்ட்டுகள் வானொலிகளில் இருந்து ஸ்பாட்டிஃபை போன்ற நவீன இசைத்தளங்களிலும் உள்ளது. சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு இதுவரை ஜி.வி. இசைமைத்துள்ளார். வெயில் படத்துக்குப் பின்னர் இவரது இசையில் வெளியான கிரீடம், பொல்லாதவன் படங்கள் அன்றைய வானொலிகளை ஆக்கிரமித்தது. இசையமைப்பாளராக, பாடகராக இசைப் பிரியர்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இன்றைக்கும் விருந்து வைத்துக்கொண்டு இருக்கின்றார். குறிப்பாக ஜி.வி. பிரகாஷ்குமார், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்துவிட்டாலே அந்த படத்தின் இசையின் தரம் என்பது மற்ற படங்களின் இசையை அதனுடன் போட்டிக்கே வராது எனும் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்.

காதலை தனது இசையின் மூலம் கடத்தும் வல்லமை கொண்ட ஜி.வி. மனிதனின் மற்ற உணர்வுகளையும் தனது இசையால் கடத்தி ரசிகர்கள் மனதில் காலத்தால் அழிக்கமுடியாத சிம்மாசனத்தை எழுப்பியுள்ளார். அந்த வரிசையில், தெய்வத்திருமகன் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு, மதராசப்பட்டினத்தில் இடம் பெற்றுள்ள, பூக்கள் பூக்கும் தருணம் பாடல், டார்லிங் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல், ஆடுகளம் படத்தில் இடம் பெற்றுள்ள யாத்தே யாத்தேவும், ஐய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடலும், மயக்கம் என்ன படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே உயிரே, அங்காடித்தெருவில் இடம்பெற்றுள்ள உன்பேரைச் சொல்லும்போதே, தாண்டவம் படத்தின் ஒருபாதி கதவு பாடல், அசுரன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மெஹா ஹிட் அடித்தது.

சூர்யாவின் சூரறைப்போற்று படத்தின் பின்னணி இசை மட்டும் கேட்டால் நம்மை உணர்ச்சிவசப்படுத்தும் அளவிற்கு தனது இசையைக் கொடுத்திருப்பார் ஜி.வி. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்றார். அதேபோல் ஆயிரத்தில் ஒருவன், அசுரன், ஆடுகளம் போன்ற படங்களின் திரைக்கதைக்கு முதுகெழும்பாக அமைந்தது ஜி.வி.யின் பின்னணி இசை. இப்படி பின்னணி இசையின் அசுரனாகவே வலம் வருகின்றார். பெரிய ஹீரோக்கள் என்றாலும் சரி வளர்ந்து வரும் நடிகர்கள் என்றாலும் சரி படத்திற்கு என்ன தேவையே அதனைச் சரியாக கொடுத்து படத்திற்கு பலமாகவே இருந்து வருகின்றார். இவரது இசையில் அடுத்து வெளியாகவுள்ள தங்கலான் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளராக மட்டும் இலலாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் புரடெக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்துள்ளார் ஜி.வி. இதுமட்டும் இல்லாமல், டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமாக தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ஜி.வி. குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான நாச்சியார், ஜெயில், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல் மாதம் இரண்டு படங்கள் ரிலீஸ் கொடுக்கும் அளவிற்கு பிஸியான நடிகராகவும் வலம் வருகின்றார் ஜி.வி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ்குமார் இன்றைக்கு அதாவது ஜூன் 13ஆம் தேதி தனது, 37வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு தமிழ் சினிமாவின் பல பிரபலங்களும் அவரது ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.