விக்கிரவாண்டி இடைத்தேர்தலை விட்டுவிட்டு அதிமுக ஒதுங்கிப்போவது என்பது தமிழகத்தில் திமுகவுக்கு, பாஜக தான் எதிர்க்கட்சி. அதிமுக 3வது இடத்துக்கு சென்றுவிட்டது என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் உள்ளது. இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று நடிகை கஸ்தூரி ஆதங்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக எம்எல்ஏவாக புகழேந்தி இருந்தார். இவர் காலமான நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இந்த தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளராக சி. அன்புமணி போட்டியிட உள்ளார். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று திடீரென்று அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக கூறியிருப்பது ஜெயலலிதாவின் விசுவாசியான என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இடைத்தேர்லை அதிமுக புறக்கணித்தது ஏற்புடையது அல்ல என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வந்தால் வரலாற்று பூர்வமாக பார்த்தால் எப்போதும் ஆளும் கட்சிக்கு சாதகமான ரிசல்ட் தான் வரும். அதில் யார் போட்டியிட்டாலும், எப்படி பணி செய்தாலும் கூட அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் வரும். ஒருவேளை அதை மனதில் வைத்து அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை என் தனிப்பட்ட கருத்து என்பது தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த வேளையில் தமிழகத்தில் ஆகச்சிறந்த பெரிய கட்சியாக உள்ள அதிமுகவே இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்பதில் எனக்கு ஏற்பு இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.
தேர்தலில் போட்டியில்லை என்பது என்னை போன்ற ஜெயலலிதாவின் விசுவாசிக்கே வருத்தமாக தான் இருக்கிறது. இரட்டை இலை இல்லாமல் தேர்தல் நடக்கிறது என்பது என்னை பொறுத்தமட்டில் ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினர் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் என்னை போன்ற பலரின் விருப்பமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல் அதிமுக ஒதுங்கி போகிறது மூலமாக பாஜக மட்டும் தான் திமுகவுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் உருவாகிறது என்பது தான் உங்களின் கேள்வி. ஆமாங்க, திமுக இருக்கும் இடத்தில் அதனை அதிமுக எதிர்க்க வேண்டும். அப்போது தான் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக இருக்க முடியும். ஒதுங்கிப்போவது என்பது பாஜக தான் எதிர்க்கட்சி. அதிமுக 3வது இடத்துக்கு வந்துவிட்டோம் என்று அவர்களாகவே வாக்குமூலம் கொடுப்பது போல் உள்ளது. என்னால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.