1970-ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்து இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகர் அரவிந்த்சாமி .
அரவிந்த்சாமி முதல் முதலில் சினிமாவில் அறிமுகமானது தளபதி படத்தில் தான். அந்தப் படத்தில் கலெக்டராக நடித்தவர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தின் கதாநாயகனாக நடித்தார். அதாவது ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த அரவிந்த்சாமிக்கு பெண்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததால் தொட்டதெல்லாம் ஹிட்டானது. ஒரு நடிகராக ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர் அதனை தனது தலையில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாகவும் சக நடிகர்களை மரியாதையாகவும் நடத்தக்கூடிய நடிகராகவே இருந்து வருகிறார் அரவிந்த்சாமி. சென்னை லயோலா கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதன் மூலம் கிடைத்த மணிரத்தினத்தின் அறிமுகத்தினால் சினிமாவிற்குள் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தனது அப்பா வீ.டி. சாமி மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தனது கல்லூரி காலங்களில் தனக்கான செலவினை தானே பார்த்துக் கொள்ள மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார் அரவிந்த்சாமி. ரோஜா படத்தின் ஹிட்டுக்கு பின்னர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வந்து கொண்டிருந்தார் அரவிந்த்சாமி. ஹிந்தியிலும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு வெளியான சாசனம் படத்தில் நடித்த அரவிந்த்சாமி அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தனது சினிமா வாழ்க்கைக்கும் மிகப்பெரிய பூட்டை போட்டு பூட்டிவிட்டு, தனது அப்பா கவனித்து வந்த பிசினஸில் கவனம் செலுத்தினார். இது மட்டும் இல்லாமல் பன்னாட்டு வர்த்தகத்திலும் கட்டிடக்கலை சார்ந்த பிசினஸிலும் ஈடுபட்டுள்ளார். ப்ரோ ரிலீஸ் என்று நிறுவனத்தின் இயக்குனராக இருந்தது மட்டுமல்லாமல் இண்டர் ப்ரோ என்ற நிறுவனத்தின் தலைவராகவும் மிகச் சிறப்பாகவே இவர் செயல்பட்டுள்ளார்.
அதன் பின்னர் தானே லேண்ட் மக்ஸ்மஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை உருவாக்கி அதில் 5000 பேருக்கு மேல் வேலை பார்க்கும் அளவிற்கு விரிவு படுத்தினார். தொழிலில் கொடிகட்டி பறந்து வந்து கொண்டிருந்த வேலையில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் அரவிந்த்சாமியின் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தார். இப்படி முடங்கிக் கிடந்த அரவிந்த் சாமியை மீண்டும் சினிமா பக்கம் கூட்டி வந்தவரும் மணிரத்தினம் தான். மணிரத்தினத்தின் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார் அரவிந்த்சாமி. இதையடுத்து 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் ஒரு பக்காவான வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இன்று தனது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அரவிந்த் சாமிக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.