சாராயம் விக்கிறவனும், திருடனும் சட்டசபைல இருக்காங்க: நடிகர் ரஞ்சித்!

கள்ளச்சாராயம் விக்கிறவனும், திருடனும் சட்டமன்றத்தில் இருந்தால் நாடு எப்படி உருப்படும் என்று நடிகர் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த நடிகர் ரஞ்சித், தற்போது கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடகக் காதல், உயர் சாதி பெண்களை வேறு சாதி இளைஞர்கள் திட்டமிட்டு காதலிப்பது போன்றவற்றை இந்த திரைப்படம் பேசும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஞ்சித் கூறியதாவது:-

கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் நடிக்கும் இந்தப் படத்தை நானே இயக்கி இருக்கிறேன். கோவையை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பணக்கார பிள்ளைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நாடகக் காதல் தான் படத்தின் கரு. இன்றைய காலத்தில் வரதட்சிணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என்று கூறி எவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும்.

சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பண்ணச் சொன்னால், பண்ண மாட்டார்கள். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது. அப்படிச் சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து திருமணம் நடத்தி வைப்பதற்கு பதில், அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே. நான் நாடகக் காதல் என்று சொல்லும் பொழுது என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள்.

மாடுகள் தெய்வமாக, விவசாயத் தொழிலுக்கு காலம் காலமாக பக்க பலமாக உள்ளது. என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடகக் காதலை ஆதரிப்பவர்கள் தான். அரசியல் கட்சி தொடங்கவும், சேரவும் எனக்கு திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளனர்.

“நல்லவர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை என்றால், திருடர்களும், சாராயம் விற்பவர்களும் தான் சட்டமன்றத்தில் இருப்பார்கள். அதனால் நல்லவர்கள் எல்லாம் தயவுசெய்து அரசியலுக்கு வாங்க” எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நிருபர், “அப்படியென்றால் சட்டமன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் திருடர்கள் என சொல்கிறீர்களா?” என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித், “இங்க பாருங்க.. 50 வருடமாக தமிழ்நாட்டில் 2 கட்சிகள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டின் மீது ரூ. 10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் இருக்கிறது. அப்படியென்றால் சிறந்த ஆட்சி நடந்திருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? இங்கே இருக்கிற ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும், எம்.பி.க்களுக்கும் ப்ளாஷ்பேக் இருக்கு. அதையெல்லாம் தோண்டி எடுப்போமா?

இன்றைக்க மக்கள் எல்லாம் கஷ்டப்பட தானே செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு எல்எல்ஏவும் தனது தொகுதிக்கு தேர்தல் சமயத்தில் ரூ.60 கோடி செலவு செய்கிறார் என்றால் அந்த பணம் எங்கிருந்து வருகிறது? ஒரு எம்.பி. ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி செலவு செய்து ஜெயிக்கிறான் என்றால் அந்த பணம் எங்கிருந்து வருகிறது? இவங்க என்ன பில்கேட்ஸ் பேரன்களா? எல்லாம் மக்களின் பணம் தானே” என ரஞ்சித் கேள்வியெழுப்பினார்.

கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளைய தலைமுறையை காப்பாற்ற, அரசியல் மாற்றம் வர வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு நிதி அளிக்கின்றனர்.

அரசியல் மிகப்பெரிய வியாபாரம். எனவே, நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என ஆசை எனக்கும் உள்ளது. விவசாயிகள் தற்கொலைக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதில் வருமானம் இல்லாததால் இவர்கள் விரும்புவதில்லை. மதுவை வைத்துத் தான் வளர்ச்சி. தமிழ்நாடு, மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சியடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.