உடல்நலம் பாதிக்கப்பட்ட வெங்கல் ராவிற்கு நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் உதவி!

நடிகர் வெங்கல் ராவ், வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி கலாட்டா செய்தவர். இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக வெங்கல் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ மூலம் திரைத்துறையினரிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ் படங்களில் பல காமெடி கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படவில்லை என்றும் வெங்கல் ராவ் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். தனக்கு சரியாக பேசக்கூட முடியவில்லை என்றும் சினிமா கலைஞர்கள் தனக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சிம்பு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். இதே போல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முன்னதாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார். சிகிச்சைக்காக அடுத்தடுத்த நடிகர்கள் பண உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவிற்கு சிகிச்சைக்காக வடிவேலு உதவி செய்வாரா என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களது கேள்விகளுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

நடிகர் வடிவேலு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக தற்போது 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். மேலும் தொலைபேசி மூலம் வெங்கல் ராவின் உடல்நிலை குறித்தும் வடிவேலு விசாரித்ததாக தெரியவந்துள்ளது. முன்னதாக சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலாவும் வெங்கல் ராவிற்கு சிக்ச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் என்றும் அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றும் கூறியிருந்த பாலா, அனைவரையும் உதவி செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தார்.