டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அந்தகன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது!

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின. குறிப்பாக பிரசாந்த்துக்கு இரண்டாவது படத்திலேயே பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. வண்ண வண்ண பூக்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பிரசாந்த்துக்கு மேற்கொண்டு சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து நடித்த செம்பருத்தி, எங்க தம்பி படங்களும் ஹிட்டானது. சூழல் இப்படி இருக்க மணிரத்னத்தின் பார்வை பிரசாந்த்தின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார். இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.

பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படம் ஹிந்தி படமான அந்தாதூன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள். படத்தை நடிகரும் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குகிறார். ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டாலும் படம் ரிலீஸாகமலேயே இருந்தது.

இந்நிலையில் அந்தகன் படம் எப்போது ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் அந்தகன் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து பிரசாந்த் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படம் அந்தகன் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.