உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான் என்று குறிப்பிட்டு நீண்ட கவிதையை பகிர்ந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கவிதை ஒன்றை பகிர்ந்துள்ள கவிப்பேரரசு வைமுத்து. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“உத்தரப்பிரதேசத்தில்
ஆன்மிக நெரிசலில்
இறந்துபோன
அத்துணை உயிர்களுக்கும்
அஞ்சலி செலுத்துகிறேன்
சடலங்களுக்கு மட்டுமல்ல
சடங்குகளுக்கும் சேர்த்தே
இரங்குகிறேன்
ஆன்மிகச்
சொற்பொழிவாளரின்
காலடி மண்ணைக்
கவரவேண்டும் என்றுதான்
ஒருவர் காலடியில் ஒருவர்
செத்திருக்கிறார்கள்
இருதயக்கூடு
நொறுங்குகிறது
மது போதைக்கும்
மத போதைக்கும் உள்ளது
பூவுக்கும் புஷ்பத்துக்கும்
உள்ள வேறுபாடுதான்
கல்வி பொருளாதாரம்
பகுத்தறிவு என்ற மூன்றிலும்
மேம்படாத தேசம்
இப்படித்தான்
தவணை முறையில்
இறந்துகொண்டிருக்கும்
‘இருப்பவர்கள் கண்களை
இறப்பவர்கள் திறக்கிறார்கள்’
என்றோர் முதுமொழி உண்டு
இறந்தவர்கள்
இருப்பவர்களுக்குப்
பாடமாகிறார்கள்
படிப்போமா?”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.