நடிகர் விஜய் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் விஜய்க்கு ஆதரவாக நடிகை வினோதினி கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் நடந்து முடிந்த 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சி 2 கட்டங்களாக நடந்தது. முதல்கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நீட் தேர்வு பற்றி எதுவும் பேசவில்லை. இதையடுத்து நீட் விவகாரத்தில் நடிகர் விஜய் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என பலரும் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று நடந்த 2வது கட்ட விழாவில் நடிகர் விஜய் நீட் தேர்வு தேவையில்லை என்று பேசினார். மேலும் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். விஜயின் இந்த கருத்து தற்போது பெரும் விவாதமாகி உள்ளது.
விஜயின் கருத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆதரித்துள்ளனர். ஆனால் பாஜக கடுமையாக எதிர்த்துள்ளதோடு விஜயை அந்த கட்சியின் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜயின் நீட் தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛பாஜக விஜயின் கருத்தை சரியானதாக பார்க்கவில்லை. அதோடு இது சரியான சூழலாகவும் பார்க்கவில்லை. உதாரணத்துக்கு முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி பொதுத்தேர்வு என்று இருந்தால் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று தான் தம்பி விஜய் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு வந்தவர்கள் வெறும் மருத்துவர் என்ற கனவில் வந்திருக்க மாட்டார்கள். அவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு இருந்திருக்கும். அதற்கும் நுழைவுத்தேர்வு உள்ளது. இதில் நீட்டை மட்டும் வைத்து ஏன் அரசியல் செய்கின்றனர்? இதில் அவரும் (விஜய்) சிக்கிக்கொண்டார் என்பது தான் எனக்கு வருத்தமாக உள்ளது.
ஏனென்றால் இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இன்று இதை யார் வேண்டாம் என்கின்றனரோ? அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பலபேரின் கருத்துகளை கேட்ட பிறகு தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இன்று 2 லட்சம் மாணவர்கள் தான் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். அவர் கூறியபடி பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் அங்கு தெளிவாக இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதோடு எல்லா மாவட்டத்திலும் மாணவர்கள் பரவலாக தேர்வு செய்யப்படுகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பாக அரசு பள்ளிகளில் படித்தவர்கள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டனர்? மிகமிக குறைவு. அதேபோல் நீட் தேர்வில் முறைகேடுகள் இருந்தால் அது களையப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தம்பி விஜய் மாணவர்களிடம் எந்த துறையை எடுத்தாலும் சிறப்பாக படிக்க வேண்டும் என்று அக்கறையுடன் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. மாறாக மாணவர்களை பலவீனப்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார்’’ என விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் நீட் தொடர்பாக நடிகர் விஜய் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சவுந்தரராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை டேக் செய்த நடிகை வினோதினி, ‛‛நீங்கள் ஏன் நீட் எழுதி மறுபடியும் டாக்டராகக்கூடாது? எழுதி பாஸாகி காட்டுங்களேன் பார்ப்போம்!’’ என்று கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தராஜனுக்கு எதிர்த்து தெரிவித்துள்ள நடிகை வினோதினி தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் செயல்பட்டு வருகிறார்.