எனக்கு பலனளித்த சிகிச்சையை நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் பரிந்துரைத்தேன்: சமந்தா!

“எனக்கு பலனளித்த சிகிச்சையை நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் பரிந்துரைத்தேன். இதில் பணம் ஈட்டுவது தொடர்பான மற்ற எந்த தவறான நோக்கமும் இல்லை. நான் முயற்சித்துப் பார்க்காமல் அந்த சிகிச்சையை யாருக்கும் பரிந்துரைக்கவில்லை” என நடிகை சமந்தா தன்னுடைய முந்தைய சர்ச்சைப் பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பலவகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வகையான மருத்துவத்தையும் எடுத்துக்கொண்டேன். நிபுணர்களின் அறிவுறுத்தல்படி, என்னைப்போன்ற சாதாரண நபரால் முடிந்த அளவுக்கான சுய ஆய்வுக்குப் பின்னர் தான் அந்த மருத்துகளை எடுத்துக்கொண்டேன்.

இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் விலை உயர்ந்தவை. என்னால் அந்த சிகிச்சையை பெற முடிகிறது. ஆனால், இந்த விலை உயர்ந்த சிகிச்சைகளை பெற முடியாதவர்கள் குறித்தும் நான் அடிக்கடி சிந்திப்பேன். நீண்டகாலமாக நான் மேற்கொண்ட வழக்கமான சிகிச்சைகள் எதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை. இது ஒருவேளை மற்றவர்களுக்கு பயனளிக்கலாம்.

விலை உயர்ந்த சிகிச்சைகள் மற்றும் பலனளிக்காத நீண்ட நாள் சிகிச்சைகள் ஆகிய இரண்டு காரணிகள் என்னை மாற்று சிகிச்சையை நோக்கி நகர்த்தவும், அது குறித்து படிக்கவும் வழிவகுத்தது. சில பரிசோதனைகள், தவறுக்குப் பிறகு அந்த சிகிச்சைகள் எனக்கு சிறப்பான முறையில் பலனளித்தன. வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக நான் செலவழித்ததில் ஒரு பகுதியே இந்த சிகிச்சைக்கு செலவானது.
அனுபவமில்லாமல் போகிற போக்கில் நான் எந்த சிகிச்சையையும் வலுவாக பரிந்துரைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்டதன் அடிப்படையிலும், நல்ல நோக்கத்துக்காகவும் தான் இதனை பரிந்துரைத்தேன்.

என்னுடைய பதிவை தாக்கியும், என்னுடைய நோக்கத்தை தவறாக சித்தரித்தும் கருத்துகளை பகிர்ந்ததை அறிந்தேன். மருத்துவரான அவர், என்னைவிட அதிகம் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய கருத்து நல்ல நோக்கத்துக்கான என்பதையும் அறிவேன். கனிவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. குறிப்பாக நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

ஒருவேளை நான் பிரபலமாக இருப்பதால் இப்படியான கருத்துகள் வருகிறது என நினைக்கிறேன். சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவாகத்தான் அதனை வெளியிட்டேனே தவிர, பிரபலானவர் என்ற முறையில் எந்தக் கருத்தையும் கூறவில்லை. இதனால் பணம் ஈட்டும் தவறான நோக்கமும் எனக்கில்லை. நான் கற்ற அனுபவத்திலிருந்து, பரிந்துரைத்தேன்.

மேலும், நான் பரிந்துரைத்த முறையானது எனக்கு பலனளித்தது. அதனை ஒரு ஆப்ஷனாகத்தான் தெரிவித்தேன். எல்லா சிகிச்சைக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு நிலைபாடுகள் இருக்கும். இதனை கண்டறிவது கடினமானது. இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

முன்னதாக சமந்தா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் “ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சமந்தாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் லிவர் டாக் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒருவர் சமந்தாவின் பதிவை பகிர்ந்து கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், ”துரதிர்ஷ்டவசமாக, உடல்நலம் மற்றும் அறிவியல் குறித்த அறிவில்லாத, செல்வாக்கு மிக்க இந்திய நடிகையான சமந்தா ரூத்பிரபு, சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி அவரை பின்தொடரும் லட்சக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும். அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை” எனபதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.