இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலின் காட்சிகள் இருக்காது: ஷங்கர்!

இந்தியன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லை. இதை பார்த்தவர்களோ, காஜலுக்கும் படக்குழுவுக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் அது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து தான் இயக்கிய இந்தியன் 2 படத்தை ஜூலை 12ம் தேதி ரிலீஸ் செய்கிறார் ஷங்கர். இந்நிலையில் படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். விளம்பர நிகழ்ச்சிகளில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு வருகிறார்கள்.

பெரும்பாலும் ஷங்கர், கமல், சித்தார்த் தான் விளம்பர நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்கள். கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வாலை விளம்பர நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஹைதரபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு கூட அவர் வரவில்லை. ஒரு படத்தில் நடித்தால் அதன் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று சொல்லும் ஆள் இல்லை காஜல் அகர்வால். அப்படி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் 2 நிகழ்ச்சிகளை தவிர்க்கிறார், ஒரு வேளை ஷங்கருடன் பிரச்சனையாக இருக்குமோ என ரசிகர்கள் பேசத் துவங்கினார்கள்.

ஷங்கருடன் காஜல் அகர்வாலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் விளம்பர நிகழ்ச்சிகள் பக்கமே வராததற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணத்தை ஷங்கரே தெரிவித்துள்ளார். இந்தியன் 2 நிகழ்ச்சிகளில் காஜலை காணோமே என ஷங்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலின் காட்சிகள் இருக்காது. இந்தியன் 3 படத்தில் தான் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றார்.

ஜூலை 12ம் தேதி தியேட்டரில் காஜல் அகர்வாலை பார்க்கலாம் என காத்திருக்கும் அவரின் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி தகவலாகும்.