பாலிவுட்டில் நடிக்க நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: சம்யுக்தா மேனன்!

பாலிவுட்டில் நடிக்க நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நடிகை சம்யுக்தா மேனன் கூறியுள்ளார்.

மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார். நடிகர் தனுஷ் உடன் நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் 2022இல் அறிமுகமான சம்யுக்தாவின் விரூபாக்‌ஷா திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘ஆதி சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் தெலுங்கில் ஸ்வயம்பு படத்திலும் பெயரிடப்படாத நகைச்சுவை படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டிலும் (ஹிந்தியில்) அறிமுகமாகவுள்ளார். கஜோல், பிரபுதேவா நடிக்கும் மஹாராக்ணி படத்தில் சம்யுக்தா நடிக்கிறார். இதில் கஜோலின் தங்கையாக நடிக்கிறார். நேர்காணல் ஒன்றில் சம்யுக்தா பேசியதாவது:-

நான் கேரளாவில் இருந்து வருகிறேன். ஆனால் தற்போது தெலுங்கில் அதிகமாக படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் மொழியின் தடைகளை உடையும் நேரத்தில் நான் வந்திருக்கிறேன். புஷ்பா படத்தினை பல மொழிகளில் பார்த்தார்கள். பலரும் தங்களது மொழியை மறந்து மற்ற மொழி படங்களில் கலந்து பணியாற்றுகிறார்கள். தெலுங்கில் பல ஹிந்தி நடிகர்கள் நடிக்கிறார்கள். நடிகர் / நடிகையாக நாம் அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்க வேண்டும். மற்ற மொழிகளில் தற்போதுதான் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன். பாலிவுட்டில் நடிக்க நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்யமான போட்டி நிலவுகிறது.

மலையாளம் கதைக்கு முக்கியத்துவமுள்ள துறை. மாஸ், கதைக்கு முக்கியத்துவம் உள்ளதுமென தெலுங்கில் அனைத்தும் கலந்திருக்கும்; ஆனால் ஹிந்தியில் இன்னும் கொஞ்சம் நன்றாக எடுக்கலாம் எனத்தோன்றும். அவர்களது ரசனை வாழ்க்கையைவிட பெரிதாக எதிர்பார்க்கிறார்கள். அசாதரணமான ஒன்றையே பெரிதும் ஹிந்தி மக்கள் விரும்புவதாக நினைக்கிறேன். ஆனால் கடைசியாக தற்போது தென்னிந்தியாவும் ஹிந்தி சினிமாவும் ஒன்றிணைந்ததாக பார்க்கிறேன். இரண்டு தரப்பு மக்களும் மற்றவர்களின் படங்களை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர். அது பாகுபலி படத்தில் இருந்து தொடங்கியது. அது தற்போதும் தொடங்குகிறது. அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.