மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் வெளியீட்டில் தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பாடகர் தீ பாடியுள்ளார். வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். தீ குரலில் ஆர்ப்பாட்டம் இல்லாத கிளாசிக்கல் மெலடியாய் மனதை வருடுகிறது பாடல். யுகபாரதியின் வரிகளும் சந்தோஷ் நாராயணனின் மென்மையான இசையும் மனதுக்குள் வானவில்லின் வண்ணம் பூசுகின்றன. பாடகர் தீ-யின் குரலில் “பனங்கருக்கும் பால் சுரக்கும்… பசி மறக்கும் நாள் பிறக்கும்” போன்ற வரிகள் உற்சாகமூட்டுகின்றன. கிராமத்துப் பின்னணியும், பள்ளியும், காடும், மரமும் செடியும் பூவுமாய், பால்யத்தை சுகமாக மனசுக்குள் சுமக்கச் செய்திருக்கிறது பாடலின் காட்சிகள். குறிப்பாக பாடல் வீடியோவில் நிகிலா விமல் ரசிக்க வைக்கிறார்.