சினிமாவில் 65 ஆண்டுகள்: கமல்ஹாசனைக் கொண்டாடிய தக் லைஃப் படக்குழு!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவினர் அதனைக் கொண்டாடியுள்ளனர்.

1960 ஆக.12 ஆம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக இருக்கிறார். பல மொழிகளின் முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கமல்ஹாசன் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி வியந்துகொண்டே இருக்கின்றனர். இறுதியாக, அவர் நடிப்பில் வெளியான கல்கி ஏடி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், இந்தியன் – 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் கேலி, கிண்டல்களையும் சந்தித்தது.

தற்போது, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனை கைதட்டி வரவேற்று, சினிமாவில் அவரின் 65-வது ஆண்டுக்கான வாழ்த்துகளைத் தக் லைஃப் குழுவினர் பகிர்ந்துகொண்டனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.