கடந்த 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யாமேனன் பெற்றுள்ளார். இதையடுத்து நித்யா மேனனுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்துள்ள நடிகர் தனுஷ், அவருக்கு தன்னுடைய பாராட்டுக்களை எக்ஸ் தள பக்கத்தின்மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட அனைத்து விருது பெற்றவர்களுக்கும் அவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
70வது தேசிய விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டிற்கான இந்த விருதுகள் பட்டியலில் தமிழின் பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் விருதுகளை அள்ளியுள்ளன. மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த பொன்னின் செல்வன் படம் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும் சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடன இயக்குனர் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வாகியுள்ளார். படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் தனுஷுடன் அவர் போட்டிப் போட்டு நடித்திருந்த நிலையில், அவர் தற்போது இந்தப் பெருமைக்கு உள்ளாகியுள்ளார். இதேபோல இந்தப் படத்தின் மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு கொரியோகிராப் செய்த டான்ஸ் மாஸ்டர்கள் ஜானி மற்றும் சதீஷ் இருவரும் சிறந்த நடன இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடிகை நித்யா மேனன் உள்ளிட்ட டீமிற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனுடன் போட்டி போட்டு நடித்திருந்த நடிகர் தனுஷ், அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நித்யா மேனன் தேசிய விருதை பெற்றது தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல படத்தில் நடனம் அமைத்து தேசிய விருதை பெற்றுள்ள ஜானி மற்றும் சதீஷ் மாஸ்டர்களுக்கும் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருச்சிற்றம்பலம் டீமிற்கு இன்றைய தினம் மிகச்சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 70 வது தேசிய விருதுகளை இந்திய அளவில் பெற்றுள்ள அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதே போல பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கும் அவர் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் இந்த விருதை பெற்றுள்ளது சிறப்பாக உணர வைத்துள்ளதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் ராயன் படத்தில் இசையமைத்துள்ள ஏஆர் ரகுமான், படததின் இசையை சிறப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.