‘தங்கலான்’ படம் முதல் நாளில் ரூ.26.44 கோடி வசூல்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 15) வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.26.44 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தெரிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடித்துள்ளார். அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிராகாஷ்குமார் இசையமைப்பித்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடன இயக்குநராக சாண்டி பணியாற்றி உள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தை தேடி செல்லும் பயணத்தில் கதாநாயகன் மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. விக்ரம் உட்பட அனைவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தப் படம் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் நாளில் உலக அளவில் ரூ.26.44 கோடி வசூல் செய்துள்ளது. இந்தப் படம் வரும் 30-ம் தேதி வட இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 15) ரசிகர்களுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் பார்த்தார்.
அதன் பிறகு அவர் கூறியதாவது:-

தங்கலான் படம் வெளியாகி, பார்வையாளர்கள் மத்தியில் பாசிட்டிவ் ரிவ்யூஸை பெற்று வருகிறது. அது எனக்கு சந்தோஷம் தருகிறது. மக்கள் பலரும் பார்த்துவிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படம் நிச்சயம் எல்லோரிடத்திலும் சென்று சேரும் என நம்புகிறேன். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

வித்தியாசமாக கதை சொல்ல வேண்டும் என நான் யோசிப்பது இல்லை. நான் சொல்ல வேண்டும் என்பதை எனது படைப்புகள் மூலம் சொல்கிறேன். இவ்வாறு பா.ரஞ்சித் கூறினார்.