மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன.
இப்படம் வெளியீட்டில் தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடக்கத்திலேயே மூச்சு வாங்கியபடி சிறுவன் ஒருவன் “காய் சுமை இல்லாத ஊர பாத்து ஓடிப்போயிடலாம்” என்கிறார். அடுத்து வரும் கருப்பு வெள்ளை காட்சியில், ‘காய் சுமைக்கு எதுக்கு அட்வான்ஸ் வாங்குன’ என சிறுவன் ஆக்ரோஷமாக கேட்கிறார். வாழைத்தாரை சுமந்து செல்லும் வலியை மேற்கண்ட வசனங்கள் கடத்துகின்றன. வாழைத்தாரின் கனம் ஒருபுறம் அதனைச் சுமந்து செல்லும்போது கால்களில் ஏற்படும் புண்களின் கோரத்தையும் அச்சு அசலாக சில காட்சிகள் பதிவு செய்கின்றன.
இப்படியான இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு நடுவே ஆசிரியரான நிகிலா விமலின் வருகை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒருகட்டத்தில் கோபத்தில் வாழைத்தாரை தண்ணீரில் வீசி எறிகிறான் சிறுவன். யதார்த்தமான கிராமத்து மக்களுக்கிடையே அழுத்தம் சுமந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் சிறுவனின் வாழைத்தாரை சுமக்கும் வாழ்க்கை பயணத்தை இன்னும் சில சாதிய நெருக்கடிகளுடன் படம் பதிவு செய்கிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ட்ரெய்லரில் வரும் அம்பேத்கர் புகைப்படம் கவனம் பெறுகிறது. படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.