நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி வடிவேலு வழக்கு!

ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், இதுதொடர்பாக சிங்கமுத்து பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்து நகைச்சுவை நடிகராக உள்ளேன். நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக நடித்து வந்தோம். 2015-ம் ஆண்டுக்குப்பிறகு என்னைப்பற்றி மோசமாக விமர்சித்து வந்ததால் அவருடன் சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்தேன். இந்நிலையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை அவர் எனக்கு வாங்கி கொடுத்தார். இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக நான் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரைகளங்கப்படுத்தும் செயல். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து 2 வாரத்துக் குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.