அநீதி யாருக்கு நடந்தாலும் அதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்: நடிகை பாவனா!

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயலை கிளப்பி வரும் நிலையில், நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் சேகுவாராவின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டி சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை பாவனா தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது:-

எல்லாவற்றையும் விட, இந்த உலகில் எங்கு யாருக்கு அநீதி நடந்தாலும் சரி, அதன் உண்மைத் தன்மையை ஆழமாக புரிந்து கொள்ளும் திறமை வேண்டும் என சேகுவாராவின் வாசகத்தை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளார். மலையாள திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை கிளப்பி வரும் நிலையில் நடிகை பாவனா தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து ஹேமா தலைமையில் ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிட்டி, புகார் கொடுத்த நடிகைகளிடம் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “மலையாள திரையுலகமே 15 பேர் கொண்டவர்களின் பிடியில் இருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டினர். நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள். அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர். உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட ஒரு பகுதி அறிக்கையே வெளியாகியுள்ளது.

சூட்டிங் செல்லும் போது நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களை உடன் அழைத்து வருகிறார்கள் என்றும் நடிகைகள் சொன்னதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.