கேரளாவில் இப்போது அதிகம் பேசுபொருளாகியிருப்பது என்றால் அது ஹேமா கமிஷன் அறிக்கைதான். முக்கியமான நடிகர்கள் பலர் இதில் சிக்குவார்கள் என்று பலரும் கூறிவரும் சூழலில் நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி இதுகுறித்து பேசியிருக்கிறார்.
சினிமாவில் பெண்களுக்கு காலங்காலமாக பாலியல் தொல்லைகள் இருந்து வருகின்றன. இதன் காரணமாகவே பல வீடுகளிலிருந்து பெண்கள் சினிமா துறைக்கு செல்வதற்கு தடா போட்டுவருகிறார்கள். அதையும் மீறி வரும் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்யும் அராஜக போக்கு சினிமாவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மேலும் வாய்ப்பு வேண்டுமென்றால் அதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தே ஆக வேண்டும் என்ற அவல நிலையும் இன்றளவும் நீடித்துக்கொண்டே இருப்பதுதான் உண்மை. வளர்ந்துவரும் நடிகைகளுக்கு மட்டுமின்றி வளர்ந்த நடிகைகளே பாதுகாப்பில்லாமல்தான் இருக்கிறார்கள். உதாரணமாக மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலுமே ஒரு நடிகை பயங்கர ஃபேமஸாக இருக்கிறார். அந்த நடிகை சில வருடங்களுக்கு முன்னர் கேரளாவில் ஓடும் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த குரூரத்துக்கு மலையாளத்தின் ஃபேமஸ் நடிகரான திலீப்குமாரும் உடந்தையாக இருந்தது உச்சக்கட்ட அதிர்ச்சி. அந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை கண்டறிய கேரள அரசு சார்பாக ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான அந்தக் குழுவில் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்த கமிஷன் தனது அறிக்கையை 2019ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பித்தது. இத்தனை வருடங்கள் கழித்து கேரளாவை சேர்ந்த 5 பேர் ஹேமா கமிஷன் அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஓபனாக கூறியிருக்கிறார்கள். மேலும் கேரளாவை சேர்ந்த முக்கிய நடிகர்களும் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சீனியர்களான சித்திக், ரஞ்சித் போன்றோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் அம்மாவில் தாங்கள் வகித்த பொறுப்பிலிருந்து விலகியும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களுக்கு வெறும் தீவனம் மட்டும்தான். அதில் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். ஊடகங்களை பொறுத்தவரை இந்த விஷயத்தை சண்டையை கிளப்பிவிட்டு அதில் ரத்தத்தை குடிப்பவர்களை போல் இருக்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்துகின்றன ஊடகங்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.