மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகமாக உள்ளதா என்பது பற்றி நடிகை ஊர்வசி பேசியுள்ளார். எல்லா மாநிலத்திலும் பெண் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.
நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையானது மலையாள சினிமா உலகையே புரட்டிப் போட்டுள்ளது. இந்த விவகாரத்தின் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த நடிகர் மோகன்லால் பதவி விலகி இருக்கிறார். கூடவே சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒட்டுமொத்த சங்கத்தின் மீதும் நீதிபதி ஹேமா கமிஷன் முன் சக நடிகைகள், திரைத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் பெண்களுக்குப் பாதுகாப்பு தர தவறி இருக்கிறது.
இந்த அறிக்கை பற்றி மூத்த நடிகை ஊர்வசி ஒரு ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் ஊர்வசி கூறியுள்ளதாவது:-
நான் எனது 9 வயதிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தேன். குழந்தைப் பருவத்தில்தான் நான் கேரளாவிலிருந்தேன். எனது சினிமா வாழ்க்கை தமிழிலிருந்துதான் தொடங்கியது. அடுத்த தெலுங்கு, கன்னடம் எனக் கடைசியாகத்தான் மலையாளம் போனேன். நான் திரைப்படத்துறைக்குள் வரும்போதே எனக்கு முன்னோடியாக இருந்த சில நடிகைகள் இந்த மாதிரியான பாலியல் தொல்லைகள் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினை சினிமா உலகத்தில் புதியதாக இப்போது வந்ததல்ல. ஆனால், அரசாங்கம் திரைத்துறையில் உள்ள பெண்களின் பிரச்சினையைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவும் பாதிக்கப்பட்ட திரைத்துறை பெண்களின் அடையாளம் எதுவும் வெளியே வராது என்ற உத்தரவாதத்தை அரசும் முதல்வரும் கொடுத்தார். அந்த நம்பிக்கையில்தான் பெண்கள் வெளிப்படையாக இந்தப் பிரச்சினை பற்றிப் பேச முன்வந்தார்கள். இதனால் கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.
வட இந்தியாவில் படிப்பறிவு இல்லாதவர்கள் பெண்கள் மீது நடத்தும் பாலியல் கொடுமையோடு ஒப்பிடும்போது கேரளா முன்னேறித்தான் இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பெண் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால், கேரளாவில்தான் பெண்கள் அதைத் துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். எதிர்த்து குரல் கொடுத்தனர். அங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்படையக் கூடாது என்பதற்காக வெளிப்படையாகப் போராடுகின்றனர். தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால், அதை வெளிப்படையாகப் பேச யாரும் முன்வரவில்லை. கேரளாவில் ஒரு பெண் தனக்கு நடந்த அநீதியை எதிர்த்து தைரியமாக முன்வந்தார். அவரை தொடர்ந்துதான் வழக்கு வேகம் பெற்றது. அந்த மாதிரி தைரியமான பெண் யாரும் தமிழ் சினிமாவில் முன்வரவில்லை. அதனால் இங்கே எதுவுமே நடக்கவில்லை எனச் சொல்ல முடியாது.
ஹேமா கமிஷனின் சில முக்கியமான விசயங்களைப் பெண்கள் முன்வைத்துள்ளனர். முதலில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் சம அளவில் இல்லை. அடுத்துப் பேசப்படும் ஊதியம் சரியாக வழங்கப்படுவது இல்லை. சில விஷமிகள் இரவு நேரங்களில் கதவைத் தட்டி தொல்லை கொடுக்கிறார்கள். கதை சொல்வதாக அழைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள் எனப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக் கணக்கான நபர்களுடன் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். ஆனால், தனிப்பட்ட சந்திப்பின்போதுதான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படி என்றால், பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும். ஒரு ஹோட்டல், ரெஸ்டாரண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறைவில் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கு வர முடியாது எனச் சொல்ல வேண்டும். அதை ஒரு விதிமுறையாகவே சினிமா சார்ந்த சங்கங்கள் வைக்க வேண்டும். அப்படி மீறித் தனிப்பட்ட சந்திப்பு நடந்தால், அதற்குச் சங்கம் பொறுப்பு அல்ல எனச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால், யாரும் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைக்க மாட்டார்கள்.
நாம் ஒரு பொதுவான விதியைத்தான் உருவாக்க முடியும். யார் நல்லவர்? யார் கெட்டவர் எனத் தேடிப் பார்த்து சட்டம் வகுக்க முடியாது. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துவிட்டார் என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. அது விசாரிக்கப்பட்ட வேண்டும். சிலர் ஒருவரின் நன்மதிப்பைக் கெடுக்கவும் கூட பொய்யான புகாரை அளிக்கலாம். எனவே எந்த விசயமாக இருந்தாலும் விசாரணை தேவை. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விசாரணை முக்கியம். ஹேமா கமிஷன் அறிக்கை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அது பாதுகாப்பாக உள்ளது. அதில் உள்ள பெண்கள் யார்? பாதிக்கப்பட்டவர்கள் என்ற விவரங்களை அரசு வெளியிடாது. எனவே பொத்தாம் பொதுவாகக் கேரள சினிமா என்றால் இப்படி எனப் பேசக் கூடாது. எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகிறது. அவளது விருப்பத்தைக் கேட்பதில் தவறில்லை. உடனே அதையே பாலியல் சீண்டல் என சொல்லக் கூடாது. அந்த ஆண் அதையே ஒரு தொழிலாக வைத்து பலரை பின் தொடர்வது தவறானது. பெண் மீது தாக்குதல் நடத்துவது ஒரு குற்றம். இதனால் ஒரு தொழிலே முடக்கப்படுகிறது என்றால்தான் அது பிரச்சினை. அப்போதுதான் பெண்கள் புகார் அளிக்கிறார்கள். அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.