‘வாழை’ திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள்
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியானது ‘வாழை’. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நடிகர் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சிலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘வாழை’ திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.