விஜய்யின் ‘தி கோட்’ சிறப்பு ப்ரொமோ வீடியோ வெளியீடு: சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் சிறப்பு புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை (செப்.5) படம் வெளியாக உள்ள நிலையில், புரமோ வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. மேலும் ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்.5) ரிலீஸாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் நாளை வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் 34 வினாடிகள் ஓடும் புரமோ வீடியோவை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரேம்ஜியின் குரலில் ‘GOAT’ ஒலிக்க, யுவனின் பின்னணி இசையில் அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகர்கின்றன. துள்ளல் இசையுடன் ஆக்‌ஷனும், நடனும் என மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாக வீடியோ கட் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாரணையில், “ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘தி கோட்’ திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 5-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி கோட் படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்த நிலையில், “தமிழ்நாடு அரசுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றும், எப்போதுமே சினிமாவை வாழ வைக்க நினைக்கும் உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன்” என படத்தின் க்ரியேட்டிவ் புரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.